நாகை: மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் விசைப்படகுகளை பழுது நீக்குதல் மற்றும் வலைகள் சீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப் பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் ஓய்வில் இருந்து வருகின்றனர். 60 நாட்கள் இந்த தடைக்காலம் நீடிக்கும்.
தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக கரையேற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடைகாலத்தை முன்னிட்டு நாகை மீன்பிடி துறைமுகம், கடுவையாறு பகுதிகளில் இன்ஜின் பழுது நீக்கம், படகு சீரைமத்தல், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனைங்களை பழுது நீக்கம் செய்தல், படகுகளில் வர்ணம் அடித்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.
இப்பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு படகினை பழுது நீக்கி மராமத்து பணிகள் மேற்கொள்ள ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் ஆகும். படகு ஒன்றுக்கு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை செலவாகும் என்று மீனவர்கள் கூறினர். மீன்பிடி உபகரணங்களை சீரமைக்க ஏற்படும் செலவுகளை ஒன்றிய அரசு மானியத்தில் வங்கி கடனாக வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.