*உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
பல்லடம் : மீன் பிடி தடை காலம் அமலில் உள்ளதால், கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் பல்லடம், பொங்கலூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினசரி விற்பனையை பொறுத்து பண்ணை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.100 வரை செலவாகிறது.
தற்போது தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் தொடங்கியுள்ளது. இதனால் கறிக்கோழி விற்பனை அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 28ம் தேதி ரூ.78 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) பண்ணை கொள்முதல் விலை படிப்படியாக உயர்ந்து மே மாதம் 11ம் தேதி ரூ.102 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு கறிக்கோழி உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது இறைச்சி கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சில இடங்களில் ஏற்றத்தாழ்வுடன் விற்பனை செய்யப்படுகிறது.