திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே படகில் இஞ்சின் கோளாரால் கடலில் சிக்கி தவித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவ குப்பத்தை சேர்ந்த வீரவேல் (35), பாலசுப்பிரமணி (48), கோவிந்து (55), இளங்கோவன் (38), பவுன்ராஜ் (34), சிலம்பரசன் (35) ஆகிய 6 பேரும் நேற்று முன்தினம் மதியம் கடலில் மீன்பிடிக்க ஒரே இன்ஜின் படகில் சென்றனர். இவர்கள் வழக்கமாக நேற்று முன்தினம் இரவோ அல்லது நேற்று காலையோ வீடு திரும்ப வேண்டியவர்கள் ஆவர். இநிலையில், நேற்று மதியம் ஆகியும் கரைக்கோ அல்லது வீட்டிற்கோ அவர்கள் திரும்பவில்லை.
இதனால் அவர்களது குடும்பத்தார் பதறிப் போய் கிராமத்தில் உள்ளவர்களிடம் கூறினர். உடனே புதுப்பட்டினம் குப்பத்தை சேர்ந்த 2 படகுகளிலும், மற்றும் உய்யாலி குப்பம், மெய்யூர் குப்பம், சதுரங்கப்பட்டினம் குப்பம் என 5 படகுகளில் காணாமல் போனவர்களை தேடி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மேலும், மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் மூலம் கடலோர காவல் படையினருக்கு தகவல் தரப்பட்டது. தொடர்ந்து அவர்களும் காணாமல் போன மீனவர்களை தேடி வந்த நிலையில், அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை கோவளம் கடற்கரையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் ஒரு படகு தத்தளித்துக் கொண்டிருப்பதை படகுகளில் தேடிச் சென்றவர்கள் பார்த்தனர்.
அந்தப் படகை நெருங்கிப் பார்த்த போது காணாமல் போன 6 பேர் சென்ற படகு என தெரிய வந்தது. பசியோடும், பயத்தோடும், வாடிய நிலையில் வேதனையுற்ற அந்த 6 பேரையும், தேடிச் சென்றவர்கள் மீட்டு தாங்கள் கொண்டு சென்ற படகுகளில் பத்திரமாக மீட்டு புதுப்பட்டினம் குப்பத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களைப் பார்த்ததும் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர். உணவு, உறக்கம் இல்லாமல் உடல் நலம் குன்றிய நிலையில் காணப்பட்ட 6 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கல்பாக்கத்திலுள்ள அணுசக்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது படகின் மோட்டார் இன்ஜின் பழுதாகி விட்டதால் வீடு திரும்ப முடியாமலும், தகவல் தர செல்போன் சிக்னல் கிடைக்காததாலும் தவித்து வந்ததாக கூறினர். கடலில் சிக்கி தவித்த மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு வந்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.