சென்னை:தமிழ்நாடு மீனவர்களுக்கு வழங்கபடும் மானிய டீசல் எரியெண்ணெய் அளவினை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் எரியெண்ணெய் விலையினால் மீன்பிடி தொழில் இலாபகரமானதாக இல்லை என்பதால் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை தொடர்ந்திடும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் எரியெண்ணெய் அளவினை உயர்த்தி வழங்கிட கோரி அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கைகள் அளித்துள்ளன.
அவர்களின் கோரிக்கையினை ஏற்று. அத்துயரினை போக்கிடும் வகையில், 18.08.2023 இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில், முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும், விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அளவினை, படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 4,000 லிட்டரிலிருந்து 4,400 லிட்டர் வீதமும் உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அவ்வறிவிப்பினை 2024-2025ம் ஆண்டு முதல் செயல்படுத்தும் விதமாக அரசாணை (நிலை) எண்.141 கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் (மீன்-3(2)) துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4500 விசைப்படகு மீனவர்களும் 13,200 நாட்டுப்படகு மீனவர்களும் பயன்பெறுவார்கள்.