பொன்னேரி: பொன்னேரி அருகே மீனவரின் பைக்கில் இருந்த ரூ.2.25 லட்சம் திருடப்பட்டுள்ளது. வங்கியிலிருந்து அவர் பணத்தை எடுத்து வந்தபோது மர்ம ஆசாமி கைவரிசை காட்டியுள்ளான். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அண்ணமலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). மீனவரான இவர் நேற்று முன்தினம் மாலை பொன்னேரியில் உள்ள வங்கிக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். குறிப்பிட்ட அந்த வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை எடுத்த ராஜ்குமார், அந்த பணத்தை பைக்கின் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் புதிய தேரடி தெருவில் உள்ள பேக்கரிக்குச் சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த பணம் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், இதுகுறித்து பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொன்னேரி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.