தேசத்துக்கு அன்னியச் செலாவணி வருமானத்தை அள்ளித் தரும் தமிழக மீனவர்களை தாக்குவதையும், சிறைபிடிப்பதையும், அவர்களது தொழிலை அடியோடு அழிப்பதையுமே நீண்டகாலமாக, தனது முழுநேர வாடிக்கையாக வைத்திருக்கிறது இலங்கை அரசு. ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்னை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்னை. இரு மாநில மீனவர்களின் பிரச்னையும் தீர்க்கப்படும். மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன்…’’ என ராமநாதபுரத்தில் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நரேந்திர மோடி பேசினார்.
அந்த சபதத்தை அவர் நிறைவேற்றி விட்டாரா? 2014ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, பாஜ ஆட்சியில் தான் இலங்கை அரசின் அடக்குமுறைகள் இன்னும் மிக அதிகம் ஆகியிருக்கிறது. கைது, தாக்குதல், சிறைச்சாலைகள் என்பதைத் தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை இலங்கை அரசாங்கம் பறித்துச் செல்வதும், அரசுடமை ஆக்குவதும் அதிகமாக இருக்கிறது. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகும், வலையும்தான். படகுகளை உடைப்பதும், வலைகளை அறுப்பதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த 15 நாட்களில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 64 மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அப்போது மீனவர்களுக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 64 மீனவர்களையும், அவர்களது 10 விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், ரூ.1 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாயின்றி மீனவர்களின் குடும்பத்தினரும் அவதிப்படுகின்றனர். மீன்பிடிக்க சென்றால்தான் அதில் கிடைக்கும் வருவாயை வைத்து, வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியும் என்ற நிலையில் மீனவர்கள் உள்ளனர். மீனவர்களுக்காக திமுக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது. மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் கலைஞர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் மீன்பிடி தடைகால உதவித்தொகை உயர்த்தப்பட்டது. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. கடல் மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் நடைமுறையில் உள்ளது.
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர் பிரச்னைக்கு ஒரே வழி; மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததும் கச்சத்தீவு மீட்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ‘உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சி இயலுக்கான எனது குரல்’ என்ற தலைப்பில் ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ பாட் காஸ்ட் சீரிஸின் 3வது அத்தியாயத்தில் அவர் பேசுகையில், ‘‘இந்தியா கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களை காப்போம். இந்தியாவைக் காப்போம்’’ எனப் பேசியுள்ளார். மீனவர்கள் உள்பட தேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு பேசிய வார்த்தைகள் அவை.