மீன்பிடி தடைக்கால நிவாரணமாக இந்த நிதி ஆண்டில் 1.55 லட்சம் குடும்பங்களுக்கு ரூ77.52 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீன்வள உள்கட்டமைப்பை மேம்படுத்த நடப்பு நிதி ஆண்டில் ரூ1,050 கோடி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டில் அதிக வேலைவாய்ப்பை மீன்பிடி தொழில் அளிக்கிறது. தமிழ்நாடு நீண்ட நெடிய கடற்பகுதியை கொண்டிருப்பதால், மீன்பிடி தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களின் நலனைக் காக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற உடனேயே மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவித் தொகையை ரூ5 ஆயிரத்திலிருந்து ரூ6 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் முதல் கட்டமாக 1.24 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றன.
2021-22-ம் நிதி ஆண்டில் 1.71 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ85.61 கோடியும் கடந்த நிதி ஆண்டில் (2022-23) 1.78 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ89.16 கோடியும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் 1.55 லட்சம் குடும்பங்களுக்கு ரூ77.52 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தடைக்காலம் வரை செயல்பாட்டில் இருக்கும். மீனவர்களுக்கு மீன் பிடிப்பு குறைந்த காலத்தில் நிவாரணம் வழங்கும் திட்டம் 2021-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 2.07 லட்சம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ62.19 கோடி வழங்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் (2022-23) 2.04 லட்சம் மீனவர்களுக்கு ரூ61.26 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் மாநில அரசு 2021-ம் ஆண்டில் ரூ61.98 கோடியை வழங்கியுள்ளது. இதன்மூலம் 2.07 மீனவ மகளிர் நிவாரண உதவி பெற்றனர். கடந்த நிதி ஆண்டில் ரூ61.71 கோடியை அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் 2.05 லட்சம் மீனவ மகளிர் பயனடைந்துள்ளனர். மீன்படி படகுகளுக்குத் தேவையான டீசல் விற்பனை வரியின்றி ஆண்டொன்றுக்கு 22 ஆயிரம் லிட்டர் வழங்கப்படுகிறது. விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டர் டீசலும், நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டர் டீசலும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு நிதி ஆண்டுகளில் மொத்தம் 2.06 லட்சம் கிலோ லிட்டர் டீசல் வரியின்றி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு வரி விலக்கு அளித்த தொகை ரூ369.01 கோடி. நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது.
இதன்படி லிட்டர் ரூ 25 விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. 2021-22 மற்றும் 2022-23- ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் மொத்தம் 33,233 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ரூ164.97 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. படகுகளுக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானிய உதவியையும் அரசு அளிக்கிறது. இயந்திரங்களின் விலையில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 2021-22ம் நிதி ஆண்டில் 2,591 நாட்டு படகுகளுக்கு ரூ9.60 கோடி மானியத்தை அரசு வழங்கியுள்ளது. நாட்டுப்படகுகளுக்கு மாற்றாக கண்ணாடி இழை படகு வாங்கவும் மானியம் அளிக்கப்படுகிறது. 10 மீட்டர் நீளமுள்ள படகு வாங்க ரூ6.50 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
படகு, இயந்திரம், வலைகள், பனிக்கட்டி பெட்டி ஆகியவை வாங்கவும் அரசு மானிய உதவி அளிக்கிறது. மீன் வளத்தை பாதுகாக்க புதிய தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை சூரை மீன்பிடி படகு கட்டுவதற்கு 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி 105 படகுகள் கட்ட ரூ29.35 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளது. கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கடற்பாசிப் பூங்காவை அரசு ரூ127.71 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி வருகிறது.
மேலும், மீனவ மகளிருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கும் விதமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மகளிர் 1,311 பேருக்கு கடற்பாசி வளர்ப்பு மிதவைகள் மற்றும் கயிறுகள் வாங்க ரூ1.42 கோடி மானிய உதவி அளிக்கப்பட்டுள்ளது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற ஏதுவாக 6 மாத சிறப்பு பயிற்சியை இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 42 மீன் வள உள்கட்டமைப்பு வசதிகள் ரூ431.42 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நபார்டு திட்டம், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம், மத்திய பங்களிப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் நடப்பு நிதி ஆண்டில் ரூ1,050 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்குதல், திசை மாறிச் சென்ற மீனவர்களைக் கடலோரக் காவல் படை மூலம் தமிழகம் திரும்ப அழைத்து வர வகை செய்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்குதல், திசை மாறிச்சென்ற மீனவர்களைக் கடலோரக் காவல் படை மூலம் தமிழகம் திரும்ப அழைத்து வருகின்றனர்.