சென்னை: பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபடுவது தொடர்ந்தால், 2050ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய கடல் தகவல்கள் சேவை மையம், இந்திய அரசு புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தரமணி சி.பி.டி வளாகத்தில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து, கடல் தகவல்கள் மற்றும் ஆலோசனை சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாமை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நேற்று நடத்தின. இதில், தெலங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் பேசுகையில், ‘‘கடல் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும், 2050ம் ஆண்டில் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும். அதேசமயம் கடலில் உள்ள பிளாஸ்டிக்கை மீன்கள் உண்ணும். அந்த மீன்களை நாம் உட்கொள்ளும்போது நமக்கு புற்று நோய் வரும் அபாயம் உண்டு. எனவே, கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசாமல் இருக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீன் உண்டால் 15% இதய பாதிப்பு குறைவாக ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன’’ என்றார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.