*பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
நாகர்கோவில் : அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியநாயகி மீனவ கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது:
அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியநாயகி மீனவ கிராமத்தில் உள்ளவர்கள் முக்கியமாக மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். இக்கிராமத்தில் கடல் அரிப்பை கட்டுப்படுத்தவும், கடல் அரிப்பின் காரணமாக மீனவர்களின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதை பாதுகாக்கும் பொருட்டும் இரண்டு எண்ணங்களில் நேர் கல் சுவர்கள் நிறுவப்பட்டுள்ளது.
எனினும் பருவமழை மற்றும் எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக மீனவர்கள் படகுகளை தங்கள் கிராமத்தில் தரையிறக்குவதில் சிரமமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த சிரமமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான மீன்பிடி இறங்குதளமாக மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தையும், அவசர தேவையையும் உணர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பெரியநாயகி மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில் மீன் இறங்குதளப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவு பெறுவதன் மூலம் பெரியநாயகி மீனவ கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 8 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பயன்பெறுவர்.
இப்பணியினை விரைவில் முடித்து மீனவ மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மீன்பிடி துறைமுக திட்ட செயற்பொறியாளர் பிரேமலதா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் (சின்னமுட்டம்) தீபா ஆகியோர் உடனிருந்தனர்.
திருநங்கையருக்கு வீடுகள் கட்ட திட்டம்
திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைப்பாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் திருநங்கைகள் தங்களுக்கு வீடுகள் வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கை நிறைவேற்றப்படும் என கலெக்டர் உறுதியளித்திருந்தார்.
அதனடிப்படையில் சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரமார்த்தாண்டபுதூர் பகுதியில் அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் தோவாளை தாசில்தார் கோலப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.