பாலக்கோடு: பாலக்கோட்டில் மீன், இறைச்சி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாலக்கோடு மீன் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். 10க்கும் மேற்பட்ட கடைகளில் பார்வையிட்டு இருப்பு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் ஒரு சில கடைகளில் தரம் குறைவான கெட்டுப்போன விரால் மற்றும் திலேபியா வகை மீன்கள் சுமார் 15 கிலோ பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது.
கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டு, தொடர்ச்சியாக இப்படி நடந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதன் பின், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், தர்மபுரி ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் சாலை, எம்.ஜி. ரோடு, உள்ளிட்ட பகுதியில் உள்ள அசைவ, துரித உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஒரு சில கடையிலிருந்து பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கடைகளிலிருந்து செயற்கை நிறம் போட்ட சில்லி இறைச்சியும், பலமுறை பயன்படுத்தி சமையல் எண்ணெய் 2 லிட்டர் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி, எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.