புதுடெல்லி: கடந்த நிதியாண்டை காட்டிலும், 2022-23ம் நிதியாண்டில் ரூ.500 கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், நாட்டில் புழங்கும் கள்ளநோட்டுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கடந்த நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 79,669 கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2022-23ம் நிதியாண்டில் 91,110 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்தாண்டை காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2021-22 நிதியாண்டில் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் 13,604 கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2022-23ம் ஆண்டில் 9,806 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 20 ரூபாய் நோட்டுகள் கடந்த நிதியாண்டை காட்டிலும் 8.4 சதவிகிதம் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.10, ரூ.100 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மொத்த பண மதிப்பை கணக்கிடுகையில், 2021-22ல் 2,30,971 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2023ல் 2,25,769 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 2 சதவிகிதம் குறைவு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.