லண்டன்: இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடுகிறது. ஐசிசி 2025-27ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான, இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் லீட்ஸ் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணியில் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி ஓய்வு அறிவித்த நிலையில், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப்பண்ட் துணை கேப்டனாக செயல்படவுள்ளார். ஜெய்ஸ்வாலுடன், கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார். தமிழக வீரர் சாய் சுதர்சன் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரில் ஒருவர் 3வது வரிசையில் களமிறங்க வாய்ப்புள்ளது. இதில், சாய் சுதர்சனுக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. விராட் கோஹ்லி ஆடிய 4வது இடத்தில் கேப்டன் கில்லும், 5வது இடத்தில் ரிஷப் பண்ட்டும், 6வது இடத்தில் கருண் நாயரும் ஆட இருக்கின்றனர்.
சுழற்பந்து வீச்சாளர் இடத்தில் ஜடேஜா ஆடுகிறார். பாஸ்ட் பவுலிங்கில் பும்ரா, சிராஜ், ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங் அல்லது பிரசித் கிருஷ்ணா இடம்பெறுவர். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கேப்டன் கில்லுக்கு முதல் டெஸ்ட் தொடரே பெரும் சவாலாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஆகியோருடன் புதுமுக வீரர் சாய்சுதர்சன், 7 ஆண்டுக்கு பின் களம் இறங்கும் கருண் நாயர் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பவுலிங்கில் நம்பர் 1 வீரராக உள்ள பும்ரா, இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தை கெடுப்பார்.
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். முதல் டெஸ்டிற்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேட்டிங்கில் பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் என வலுவான வரிசை இருக்கிறது. பவுலிங்கில் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங் ஆகியோர் வேகத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பர். சுழலில் சோயிப் பஷீர் இடம் பெற்றுள்ளார். பேட்டிங்கில் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 10 சதம் அடித்துள்ளார். அவரை கட்டுப்படுத்துவதுதான், இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்பில் உள்ளன. கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிரா (2-2) ஆன நிலையில், இந்த முறை தொடரை வெல்ல இங்கிலாந்து போராடும். இந்திய நேரப்படி தினமும் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை சோனி டென் சேனல் மற்றும் ஜியோ ஸ்டார் ஓடிடி நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.