ராவல்பிண்டி: பாகிஸ்தான் – வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ராவல்பிண்டியில் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்குகிறது.பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. 2 போட்டிகளுமே ராவல்பிண்டியில் தான் நடைபெற உள்ளன. 2வது டெஸ்ட் கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த நிலையில், கட்டுமானப் பணிகள் காரணமாக அந்த போட்டியும் ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கும் நிலையில், 2வது டெஸ்ட் ஆக.30ம் தேதி தொடங்க உள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ள இந்த அணிகள், முன்னேறும் முனைப்புடன் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் 1519 புள்ளிகளுடன் (ரேட்டிங் 89) 6வது இடத்திலும், நஜ்முல் உசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேசம் 906 புள்ளிகளுடன் (ரேட்டிங் 53) 9வது இடத்திலும் உள்ளன. சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் லீக் சுற்றுடன் மூட்டை கட்டியது. இதனால் இரு அணிகளுமே டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும்.
பாகிஸ்தான்: 1.அப்துல்லா ஷபிக், 2.சைம் அயூப், 3.ஷான் மசூத் (கேப்டன்), 4.பாபர் ஆஸம், 5.சவுத் ஷகீல் (துணை கேப்டன்), 6.முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), 7.சல்மான் அலி ஆஹா, 8.ஷாகீன் ஷா அப்ரிடி, 9.நசீம் ஷா, 10.குர்ரம் ஷாஷத், 11.முகமது அலி. வங்கதேசம்: நஜ்முல் உசைன் ஷான்டோ (கேப்டன்), ஹசன் மகமூத், காலித் அகமது, லிட்டன் தாஸ், மகமதுல் ஹசன் ஜாய், மெஹிதி ஹசன் மிராஸ், மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரகிம், நஹித் ராணா, நயீம் ஹசன், ஷத்மன் இஸ்லாம், ஷாகிப் அல் ஹசன், சோரிபுல் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, ஜாகிர் ஹசன்.