புலவயோ: ஜிப்பாப்வே அணியுடனான முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி அபாரமாக ஆடி 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் புலவயோ நகரில் நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாக். பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் பாக். 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. ஜிம்பாப்வேயின் ரிச்சர்ட் முஸர்பானி, சிகந்தர் ராஸா, வெலிங்டன் மஸாகட்ஸா, ரையான் பர்ல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர், 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் பாக். பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 15.3 ஓவரை மட்டுமே எதிர்கொண்ட அவர்கள், 108 ரன் எடுத்து ஆல் அவுட்டாகினர். இதையடுத்து, 57 ரன் வித்தியாசத்தில் பாக் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வேயின் தடிவனஷே மருமணி 33, சிகந்தர் ராஸா 39 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் 10 ரன்னுக்குள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். அந்த அணியின் கடைசி 3 வீரர்கள் ரன் எடுக்காமல் பூஜ்யத்தில் அவுட்டாகினர். இந்த வெற்றியை அடுத்து, 1-0 புள்ளிக் கணக்கில் பாக். முன்னிலை வகிக்கிறது.


