கொழும்பு: இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி, இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்தது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன் குவித்தது. வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 67 ரன் (65 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். நிசங்கா 56 ரன் (75 பந்து, 9 பவுண்டரி), லியனகே 20 ரன், ஹசரங்கா 24 ரன், அகிலா தனஞ்ஜெயா 17 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப், அக்சர் தலா 2, சிராஜ், துபே, குல்தீப், வாஷிங்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 47.5 ஓவரில் 230 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் ரோகித் 58 ரன் (47 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), கில் 16, கோஹ்லி 24, ஷ்ரேயாஸ் 23, ராகுல் 31, அக்சர் 33, துபே 25 ரன் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் ஹசரங்கா, அசலங்கா தலா 3, வெல்லாலகே 2, அசிதா, அகிலா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளும் தலா 230 ரன் எடுத்ததால் இப்போட்டி ‘டை’ ஆனது. ஐசிசி விதிமுறைப்படி, இது பல அணிகள் பங்கேற்கும் டோர்னமென்ட் இல்லை என்பதால் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவில்லை. 2வது போட்டி நாளை பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது.