பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா ஆடவர் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் ஜூன் 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி முதலில் களமிறங்கியது. முதல் இன்னிங்சில் அந்த அணி 180 ரன்னில் (56.5 ஓவர்) சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீசும் 190 ரன்னில் (63.2 ஓவர்) ஆட்டமிழந்தது.
10 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆஸ்திரேலியா விளையாடியது. அதிலும் ரன் குவிக்க தடுமாறிய ஆஸி, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 33.4 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 141 ரன் எடுத்தது. தொடர்ந்து 3வது நாள் ஆட்டத்தை, டிராவிஸ் ஷெட் 13, வெப்ஸ்டர் 19 ரன்னுடன் தொடர்ந்தனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 102 ரன் விளாசினர். டிராவிஸ் 61, வெப்ஸ்டர் 63 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் அலெக்ஸ் கேரி 65 ரன் வெளுத்தார்.
மற்றவர்கள் குறைந்த ரன்னில் வெளியேறினாலும் ஆஸி 81.5 ஓவரில் 310 ரன் என கவுரவமான ஸ்கோரை எட்டியது. வெ.இ தரப்பில் சமர் ஜோசப் 5, அல்சாரி ஜோசப் 2 விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து 301 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை தொடங்கியது. இன்னும் இரண்டரை நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் நிதானமாக விளையாடினால் இலக்கை எட்டும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும் ஜோஷ் வேகத்திலும், லயன் சுழலிலும் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரெவ்ஸ் ஆட்டமிழக்காமல் 38, கடைசி நேரத்தில் சமர் ஜோசப் 22 பந்துகளில் 44 ரன் விளாசினர். ஒரு கட்டத்தில் இருவரும் 39 பந்துக்கு 50 ரன் விளாசி நம்பிக்கை ஏற்படுத்தினர். சமரும், கடைசியாக களமிறங்கிய ஜேடன் சீல்ஸ் டக் அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 33.4 ஓவரில் 141 ரன் மட்டுமே எடுத்ததால் ஆஸி 3வது நாளே 159 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸி தரப்பில் ஜோஷ் ஹசல்வுட் 5 விக்கெட், நாதன் லயன் 2 விக்கெட் கைப்பற்றினர்.