சென்னை: ஐஐடியை போலவே திருச்சி என்ஐடிக்கும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்த 3 பழங்குடியின மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். ஒன்றிய பல்கலைக் கழகங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ஆண்டுக்கு இரு முறை நடத்துகிறது. அண்மையில் நடந்த ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 417வது இடத்தில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் பயில தகுதி பெற்றுள்ளார் சேலம் மாவட்டம் கல்வராயன்மலையைச் சேர்ந்த கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ராஜேஸ்வரி என்ற பழங்குடியின மாணவி.
இவர், சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பயிலவும் விருப்பம் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளை எழுதி தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாணவி ராஜேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடியினர் நலத் துறையின் தொல்குடி திட்டத்தின் கீழ் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார்.
மேலும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கினார். இவரை போலவே ஏகலைவா பள்ளியில் படித்த மாணவி ரித்திகா, உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த சதீஷ், ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் ரோஷன் ஆகியோர் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) படிப்பதற்கு தேர்வாகியுள்ளனர். இதுகுறித்து திருச்சி என்ஐடிக்கு தேர்வான மாணவர்கள் கூறியதாவது: சதீஷ்: சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி தாலுகாவில் இருக்கும் வெள்ளிகவுண்டனூர் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பயின்று வந்தேன்.
அப்பா பெயர் சண்முகம், அம்மா பெயர் ராணி. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களது பள்ளியில் ஜே.இ.இ. போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சிகளை கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் வழங்கினர். இதுமட்டுமின்றி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தினசரி பயிற்சி தேர்வு நடத்தி போட்டி தேர்வுக்கு என்னை தயார்படுத்தினர். எங்களுக்கு இருக்கும் குறைகளை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின செயலர் லஷ்மி பிரியா மற்றும் பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் கேட்டறிந்து அதற்கான தீர்வை நிவர்த்தி செய்து கொடுப்பர்.
தேர்வு எழுத செல்லும் வரை தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர். தற்போது திருச்சி என்.ஐ.டிக்கு படிக்க தேர்வாகி உள்ளேன். இதற்கு தமிழக முதல்வருக்கு, அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரோஷன்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்தேன். போட்டி தேர்வில் நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ஈரோடு பெருந்துறையில் பயிற்சி பெற்றேன்.
எனக்கு அப்பா இல்லை, அம்மா இ-சேவை மையம் நடத்தி வருகிறார். தமிழக அரசு நடத்தும் நான் முதல்வன் திட்டம் மூலமாக தான் இந்த இடத்தை என்னால் பிடிக்க முடிந்தது. தற்போது குமிழியில் உள்ள ஏகலைவா பள்ளியில் தங்கி என்னுடைய கம்யூனிகேஷன் ஸ்கில்லை மேம்படுத்த பயிற்சி எடுத்து வருகிறேன். தற்போது திருச்சி என்.ஐ.டியில் படிக்க தேர்வாகி உள்ளேன். இதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறினர்.