கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக்காட்டுவதில் நாடு முழுவதும் உள்ள முதல்வர்களில் முதல்வனாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது ஆட்சியின் அடுத்த சிக்சர் 1.06 கோடி பெண்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்தபடி மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நாளை மறுநாள் காஞ்சிபுரம் நகரில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நொடியும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்துடிக்கும் தன்னிகரில்லா தலைவனாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
ரூ.440ஆக இருந்த சமையல் காஸ் விலையை இந்த 9 ஆண்டுகளில் ரூ.1118.50 ஆக உயர்த்தி விட்டு, 5 மாநில தேர்தலும், அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருவதை கண்டு பயந்து ரூ.200 மட்டும் குறைத்து விட்டு, பெண்களின் வேதனையை கண்டு விலையை குறைத்து சாதனை படைத்துவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் தலைவர் அல்ல அவர். 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அடுத்த கணமே மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணத்தை அமைத்துக்கொடுத்த பெண்களின் மனம் கவர்ந்த நாயகன் அவர்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக சொல்லி, ஆட்சியின் கடைசி காலத்தில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாக கூறிவிட்டு, அதிலும் இப்போது வரை 5.5 லட்சம் பேருக்கு, எப்படி வேலை வழங்கப்பட்டது, எப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது, எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள், எங்கு தேர்வு நடந்தது, எப்படி தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற எந்தவித விவரமும் இல்லாமல் வேலைக்கான ஆணையை வழங்கி, மாய மந்திர ஆட்சி நடத்தவில்லை மு.க.ஸ்டாலின். நான் முதல்வன் திட்டம் அறிவித்து இளைஞர்களின் வேலைக்கனவை நிறைவேற்ற உதவும் மக்கள் முதல்வர் அவர்.
சுவிஸ் வங்கி பணத்தை எல்லாம் மீட்டு ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று ஏமாற்றவில்லை அவர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அறிவித்து பசித்து வாடி பள்ளிக்கு வரும் மாணவச்செல்வங்களின் மனங்களை குளிரச்செய்தார் மு.க.ஸ்டாலின். தேசத்திற்காக பதக்கங்களை வென்று குவித்த மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் பலநாட்கள் போராடியும் அவர்கள் குரலை கேட்க மறுத்தது போல், தமிழ்நாட்டில் ஒருபோதும் இருமாப்பு கொண்டு ஆட்சி நடத்தவில்லை முதல்வர் மு.க.ஸ்டாலின். புதுமைப்பெண் திட்டம் அறிவித்து படிக்கும் 2.50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவிகள் கல்லூரி படிப்பை மேற்கொள்ள வசதியாக மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிலே இடம் பெற வைத்து அவர்களின் கஷ்டங்களை புரிந்த செயல் நாயகன் அவர்.
இந்த 9 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.13 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை பெரு முதலாளிகளுக்காக தள்ளுபடி, அவர்கள் பாணியில் ரைட் ஆப் செய்யவில்லை. கடந்த மே 3ம் தேதியில் இருந்து மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு கொண்டு இருப்பதை கண்டும், காணாமல் இருந்து கொண்டு விருந்து, கேளிக்கை, உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை. எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் இந்தியா, பாரத், சனாதனம் என்று ஏதாவது திசை திருப்பும் தந்திரங்களை உபயோகப்படுத்தவில்லை. முழுமையாக தமிழ்நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து செயல்படும் முதல்வர் தான் மு.க.ஸ்டாலின். அதனால் தான் முதல்வர்களின் முதல்வனாக ஜொலிக்கிறார் அவர்.