சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை திமுக தொடங்கி உள்ளது. இதனை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக கண்காணிக்கிறார். இதனால், அதிமுகவினர் பெரும் கலக்கத்தில் உள்ளனர். திமுகவின் மதுரை பொதுக்குழு கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய பரப்புரையை அறிவித்திருந்தார் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் திமுகவின் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து குறைகளை கேட்கவும், அதனுடன் திமுக உறுப்பினர் சேர்க்கையையும் மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை தொடங்கி உள்ளது திமுக. இதுபற்றி திமுகவின் மேல்மட்ட தலைவர்களிடம் கேட்ட போது “தேர்தல் பணி என்று வந்தால் என்றுமே திமுக தான் முதல் ஆளாய் களத்தில் நிற்கும். தற்போதும் அப்படிதான். இந்த முறை வெறும் தேர்தல் பணியாக மட்டுமில்லாமல் நான்கு ஆண்டு கால ஆட்சியின் மக்கள் நல திட்டங்கள் முறையாகச் சென்றடைந்திருக்கிறதா, மக்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை பற்றிய கள ஆய்வாகவும் இது அமைய வேண்டும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் காரணமாக இந்த ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் வீடு வீடாக சென்று நேரில் சந்தித்து பேச இருக்கிறோம். நான்காண்டு திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமை பெண், காலை உணவு திட்டம், நான் முதல்வன் இப்படி பல்வேறு நலத் திட்டங்களில் பயனடைந்த குடும்பங்கள் திமுக வோடு இணைய விருப்பம் தெரிவித்திருப்பதால், இந்த நிகழ்வோடு சேர்த்து உறுப்பினர் சேர்க்கையும் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார் எங்கள் தலைவர். ஆகவே 30% பேரை என்ன, 50% பேர் திமுகவில் இணைவார்கள்.
2026லிலும் திராவிட மாடல் ஆட்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என உற்சாகமாக தெரிவித்தனர். ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தை மிக தீவிரமாக திமுக முன்னெடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நிர்வாகிகளுக்கு தொகுதி வாரியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பரப்புரை மூலம் திமுகவின் ஆதரவு தளத்தையும், நிரந்தரமான வாக்கு வங்கி அடித்தளத்தையும் அதிகரிக்க முடியும் என திமுக நினைக்கிறது. இதனை மு.க.ஸ்டாலினே நேரடியாக கண்காணிக்க உள்ளார்.
எதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயர் என கேட்கும் போது “ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை கண்டிக்கும் வகையிலும், தொகுதி மறுவரையறை, கல்வி நிதி ஒதுக்காதது, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், மும்மொழி திணிப்பு என இவற்றை எல்லாம் எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு 10 மாதங்கள் முன்பே திமுக தேர்தல் பணியை தொடங்கி விட்டது. ஓரணியில் தமிழ்நாடு என மக்கள் சந்திப்பு, உடன்பிறப்பே வா என திமுக நிர்வாகிகள் சாந்திப்பு என பெரும் பாய்ச்சலில் திமுக சென்று கொண்டுள்ளது அதிமுகவை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் அதிமுக பாஜ கூட்டணி கீழ் மட்டம் வரை ஒருங்கிணையாமல் உள்ளது. தற்போது பாஜ நடத்திய முருகன் மாநாடு கூட அதிமுகவிற்கு பின்னடைவையே கொடுத்துள்ளது.
மேலும் பாஜ அதிமுக கூட்டணிக்கு வேறு எந்த கட்சியும் இதுவரை வரவில்லை. இவை எல்லாம் அதிமுக- பாஜ கூட்டணி வலிமையான கூட்டணி கிடையாது என்பதையே காட்டுகிறது. இந்நிலையில் திமுக மின்னல் வேகத்தில் தேர்தல் பணியாற்றி வருவது அதிமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உறுதியாக மீண்டும் திமுக ஆட்சிதான் என்ற நிலையை ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஏற்படுத்தும் என்றே அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.