பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி பகுதியைச் சேர்ந்த கேப்டன் நிஷாத் (26) என்பவருக்கும், கர்ச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சிதாராவுக்கும் கடந்த ஏப்ரல் 29 அன்று திருமணம் நடைபெற்றது. ஏப்ரல் 30 அன்று மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். மே 2 அன்று பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியாக விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், மணமக்கள் அறைக்குள் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறிக்கொண்டிருந்தது.
முதலிரவுக்காக அறைக்குள் நுழைந்த கேப்டன் நிஷாத்தை, முக்காடு அணிந்து மூலையில் அமர்ந்திருந்த சிதாரா கூர்மையான கத்தியுடன் வரவேற்றார். அப்போது அவர் கூறுகையில், ‘என்னைத் தொடாதே… நான் அமனுக்கு (காதலன்) சொந்தமானவள். கட்டாயத்தின் பேரில்தான் உன்னை திருமணம் செய்துகொண்டேன். முதலிரவைக் கொண்டாட அமனுக்கு மட்டுமே உரிமை உண்டு. நான் அவருடன் தான் வாழ விரும்புகிறேன். என்னை தொட்டால் உன்னை 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்துபோன நிஷாத், அந்த இரவு முழுவதும் சோபாவிலேயே அமர்ந்து பொழுதைக் கழித்துள்ளார். இந்த திகில் சம்பவம் தொடர்ந்து மூன்று இரவுகள் நடந்தது. இதையடுத்து, இரு குடும்பத்தினருக்கும் இடையே பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சிதாரா தனது கணவருடன் வாழ்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால், மே 30 அன்று, வீட்டின் பிரதான கேட் பூட்டப்பட்டிருந்ததால், பின்பக்கச் சுவரேறி குதித்து நள்ளிரவில் சிதாரா தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.