தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 15 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் அமெரிக்க பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் சான் பிரான்சிஸ்கோவில் அவர் மேற்கொண்ட முக்கிய சந்திப்புகள் மற்றும் கூட்டங்களில் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதல்வர் தனது பயணத்தின் முதல் நாளில் சந்தித்த அமெரிக்க நிறுவனங்கள், தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.900 கோடிக்கு மேல் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த முதலீடுகள் சென்னை, கோவை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வர உள்ளது. இதன்மூலம், பல்வேறு துறைகளில் சுமார் 4,100-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம், நோக்கியா – ரூ.450 கோடி முதலீடு செய்து, 100 வேலைவாய்ப்புகள் உருவாக்கும். பேபால் – 1,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கும். ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம் – ரூ.150 கோடி முதலீடு செய்து, 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கும். மைக்ரோசிப் – ரூ.250 கோடி முதலீடு செய்து, 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
இன்பினக்ஸ் – ரூ.50 கோடி முதலீடு செய்து, 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கும். இதுகுறித்து முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள் பயணம், எதிர்வரும் நாட்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, மதுரை மற்றும் செங்கல்பட்டில் ரூ.900 கோடிக்கு மேல் முதலீடு பெற்றோம். இதன்மூலம் பல்வேறு துறைகளில் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது அமெரிக்க பயணத்தில் இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், இந்த உத்வேகம் தொடர்ந்து அதிகரிக்கும். தமிழ்நாட்டிற்கு அதிகமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டின் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக அமையும். இது, மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக மாற்றும்.
முதல்வரின் இந்த பயணத்தில், அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், துறை சார்ந்த வல்லுனர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். மேலும் பல முக்கிய பொருளாதார நாடுகளிலும் இந்த முயற்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, வென்றே தீரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், சிக்ஸர் அடித்து, ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதுபோல், நமது முதல்வர் அந்நிய முதலீடு ஈர்க்க அமெரிக்க மண்ணுக்கு சென்ற முதல் நாளே ரூ.900 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார். அந்நிய முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளத்தை பெருக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, தமிழ்நாட்டை `நம்பர் ஒன்’ மாநிலமாக உயர்த்தி காட்டுவேன் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் நமது முதல்வருக்கு கிரேட் சல்யூட்.