*சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்
ஊட்டி : நான் முதல்வன் திட்டம் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என ஊட்டியில் நடந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் எம்சிஏ.,பாடப்பிரிவு துவக்க விழா நடந்தது. விழாவில், துறை தலைவர் மதுமதி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புதிய பாடப்பிரிவை துவக்கி வைத்து பேசியதாவது, தமிழ்நாட்டில் சிறந்த முறையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுத்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
நீலகிரி மாவட்டம் கல்வியின் முன்னேற்றம் அடைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் சிறந்த,உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர்.
பழங்குடியினர் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தொழிற்கல்வியை காட்டிலும், கலை அறிவியல் பாடங்களை மாணவர்கள் அதிகளவு தேர்வு செய்து வருகின்றனர்.
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக முதல்வர் நான் முதல்வன் திட்டம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் அரசு மற்றும் தனியார் வேலைகளை மட்டும் நம்பாமல் சுயமாக தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று பல்வேறு புத்தகங்களையும், நாளிதழ்களையும் படிப்பதை வாடிக்கையாக கொளள வேண்டும். இதன் மூலம் பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளில் வாழும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் வசதி இன்றி உள்ளனர். இவர்கள் செக்ஷன் 17 நிலங்களில் வசிக்கும் காரணத்தினால், பட்டா இல்லாத நிலையில், இவர்களுக்கு மின் வசதி கிடைக்காமல் போயுள்ளது. எனவே, இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு பட்டா கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள் முன்னேற்றத்திற்காக தற்போது வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டி,குன்னூர் மற்றும் கூடலூர் போன்ற பகுதிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் பல ஆயிரம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு சுற்றுலாத்துறை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலும், சுற்றுலாத்துறை சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சுற்றுலாத்துறை சிறந்து விளங்குகிறது. கடந்த ஆண்டு 22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வந்திருந்தனர். இந்த ஆண்டு இது 30 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு 27 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இந்த ஆண்டு இதுவரையில் 28 லட்சம் பேர் வந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இது 35 லட்சமாக அதிகரிக்க வாயப்புள்ளது. சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், படகு இல்லத்தில் சாகச விளையாட்டுக்கள், குடில்கள் ஆகியவை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார். முடிவில், முனைவர் செந்தில்குமார் நன்றி கூறினார். இதில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.