மெக்கே: ஆஸ்திரேலியா ஏ மகளிர் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. ஏ அணி முதலில் பந்துவீச… இந்தியா ஏ அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன் குவித்தது. தேஜல் ஹசப்னிஸ் 53, ராகவி பிஸ்ட் 82, கேப்டன் மின்னு மணி 27, ஷிப்ரா கிரி 25* ரன் விளாசினர். ஆஸி. ஏ தரப்பில் மெய்த்லன் பிரவுன் 4, நிகோலா, கிரேஸ் தலா 2, தஹ்லியா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 47 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடக்க வீராங்கனை கேத்தி மேக் 129 ரன் (126 பந்து, 11 பவுண்டரி) விளாசினார். மேடி டார்க் 27, சார்லி நாட் 26, கேப்டன் தஹ்லியா மெக்ராத் 56 ரன் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் மேக்னா சிங், மின்னு மணி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸி. ஏ 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி மெக்கேவில் நாளை காலை 8.50க்கு தொடங்குகிறது.