திருவொற்றியூர்: தீபாவளி பண்டிகை அன்று வீடுகள்தோறும் பட்டாசு வெடித்தனர். இதனால் பட்டாசு குப்பைகள் தெருக்களில் குவிந்தது. இவற்றை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பட்டாசு கழிவுகள் பெருமளவில் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் பட்டாசு கழிவுகள் சேர்ந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமித்து இரவு நேரத்திலும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதன்படி, திருவொற்றியூரில் 11.2 டன், மணலியில் 5 டன், மாதவரத்தில் 9.75 டன் என சுமார் 26 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள எரியூட்டு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.