புவனகிரி: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கூடம் பெரியகுமட்டி கிராமத்தில் உள்ளது. இங்கு சம்மந்தம் கிராமத்தை சேர்ந்த வசந்தி, லோகம்மாள், கொடியரசி, மாலதி, லதா(39) ஆகிய 5 பேர் நேற்று நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லதா இருந்த வெடி தயாரிப்பு கூடத்தில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் வெடிமருந்து கூடம் இடிந்து சுக்கு நூறானதில் லதா உடல் சிதறி பலியானார். மற்றவர்கள் டீக்குடிக்க சென்றிருந்ததால் உயிர் தப்பினர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.