சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: சாத்தூர் அருகே கீழதாயில் பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எங்குமே பட்டாசு ஆலை விபத்துக்களோ, உயிர் இழப்புகளோ நடக்காத வண்ணம் அரசு சட்டத்தையும், அரசாணையையும் பிறப்பிக்க வேண்டும். தமிழக அரசு பட்டாசு தொழிற்சாலைக்கு என்று தனிக் கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் விபத்துகள் நடக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
பட்டாசு ஆலை பணியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் காப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதேபோல் பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துகள் இனிமேலும் நடக்காத வண்ணம் பாதுகாத்துக் கண்காணிக்க வேண்டும். மேலும் இறந்தவர்களுக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் தனியார் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.