ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கீழதாயில்பட்டி கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில், நேற்று விடுமுறை என்பதால் குறைந்த அளவிலேயே தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் சில தொழிலாளர்கள் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மருந்து உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நில அதிர்வு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி தீயணைப்பு வீரர்கள் வந்தனர். ஆனால் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்பு உள்ளே சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பனையடிபட்டியை சேர்ந்த பாலகுருசாமி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். உள்ளூரை சேர்ந்த கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த கமலேஷ் ராம், ராகேஷ் ஆகிய 5 தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக ஆலையின் உரிமையாளர்கள் கணேசன், காமராஜ், போர்மேன் லோகநாதன் ஆகியோர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, போர்மேன் லோகநாதனை கைது செய்தனர்.
ரூ.4 லட்சம் நிவாரணம்
இந்நிலையில் ‘உயிரிழந்த பாலகுருசாமியின் குடும்பத்தினருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ார்.