நத்தம்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசியைச் சேர்ந்த 2 பேர் உடல் சிதறி பலியாகினர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ₹3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் செல்வம் (50). இவர் பூலான்மலை அடிவாரத்தில் தனது மாந்தோப்பில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த சிலர் வேலை செய்துள்ளனர்.
நேற்று முன்தினம்பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தபோது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளிகள் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். இதுகுறித்து நத்தம் போலீசார் நேற்று காலை சென்று விசாரித்ததில், அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த கண்ணன் (எ) சின்னன் (42), சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (எ) மாசா (30) என்பது தெரியவந்தது. ஆலை உரிமையாளர் செல்வம், ஆவிச்சிபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராவார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ₹3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.