விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் தரப்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இறந்த 7 தொழிலாளர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ராமமூர்த்தி என்பவரின் உடல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தால் கடந்த காலங்களில் ஆலை நிர்வாகம் ரூ.5 லட்சம் நிவாரணமும், ரூ.50 ஆயிரம் இறுதி சடங்கிற்கும் என மொத்தம் ரூ.5.50 லட்சம் வழங்குவது வழக்கமாக இருந்தது.
இதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த ஜூன் 19ல் வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். எனவே, சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதன்பிறகு 3 பேரின் உடல்களை மட்டும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இந்நிலையில், ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உறவினர்கள், சிஐடியு சங்கத்தினர் 2வது நாளாக நேற்றும் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விருதுநகர் – மல்லாங்கிணறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் விருதுநகர் எஸ்பி கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு திரும்பினர். ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம் வழங்கும் வரை உடல்களை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்த செவல்பட்டியை சேர்ந்த லிங்கசாமி (45), விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் உயிரிழந்தார். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 4 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒழுங்கா இருக்கணும்… வேற மாதிரி ஆயிடும்… உறவினர்களை மிரட்டிய எஸ்பி
வெடி விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உறவினர்கள் ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என உடல்களை பெற்றுக்கொள்ளாமல் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நடுவே எஸ்பி கண்ணன் போராடியவர்களை நோக்கி, ‘‘ஒழுங்கா இருக்கணும். ஆளாளுக்கு கோஷம் எழுப்பினால்… வேற மாதிரி ஆயிடும். ஒழுங்கா இருக்கணும்’’ என மிரட்டும் தொனியில் சர்ச்சைக்குரிய வகையில் எச்சரித்தார். ஏற்கனவே பட்டாசு ஆலை விபத்தில் உயிர்களை இழந்து வேதனையில் இருக்கும் உறவினர்களிடம் எஸ்பி எச்சரிக்கை விடுத்து பேசியது தொழிலாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.