சென்னை: சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 8 பேர் பலி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிவகாசி, சின்னக்காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் கவலைக்கிடமான முறையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போதுமானதல்ல எனவும், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சமும், ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சமும் உடனடியாக வழங்க வேண்டுமென உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தொழிற்சங்க அமைப்பினரும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி உடனடியாக தமிழக அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். காயமடைந் தவர்களுக்குஉயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.