சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேரும், மற்றொரு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவரும் உயிரிழந்த சோக நிகழ்வு அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக இருக்கிறது. இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் இருக்க பட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், பட்டாசு கடை விற்பனை நிலையங்களிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மிகுந்த கண்காணிப்போடு எடுக்க வேண்டும். அதில் ஏதாவது பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் அவர்களது உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலமே இத்தகைய விபத்துகளை தவிர்க்க முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதியுதவி செய்திருக்கிறார். இதை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தித் தருமாறு தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.