மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசுப் பள்ளியில் கலைஞர் நூண்றாண்டு விழாவை முன்னிட்டு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்தாண்டு ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பள்ளி – கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீ சம்பந்தமான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் அர்ஜூனன் தபசு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலகம் சார்பில் தீ பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, மாமல்லபுரம் தீயணைப்புத்துறை (பொ) சிறப்பு நிலை அலுவலர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். தீயணைப்பு அலுவலர் வெங்கட கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது? தீ விபத்தில் யாரேனும் சிக்கிக் கொண்டால் அவர்களை எப்படி மீட்பது? தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.