கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் முள்ளிமலை பொத்தை உள்ளது. இங்கு கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வட விலங்குகள் வசித்து வருகின்றன. நேற்றுமுன்தினம் இரவு முள்ளிமலை பொத்தையின் மேற்கு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ மளமள என பரவியது. தொடர்ந்து நேற்று மாலை வரை மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி வரை பாதி மலை தீயில் எரிந்தது. பின்னர் பெய்த சாரல் மழையால் தீயணைந்தது. இந்த தீயில் பொத்தையில் உள்ள அரிய வகை மரம், செடி மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.
இந்த தீ விபத்தால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டது. தீவிபத்தின் போது மலையில் இருந்து எழும்பிய புகையால் சுற்றுவட்டாரத்தில் இரண்டு கிலோமீட்டர் பகுதியில் சாம்பல் பரவியது. இதுகுறித்து வனத்துறையிடம் கேட்டபோது ‘தற்போது புலிகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதால் அந்த பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வன ஊழியர்கள் இல்லாமல் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பொத்தை அடிவாரத்தில் உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது.