உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள மருந்து மூலப்பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை சரக்கு வேன் ஒன்று புறப்பட்டு வந்தது. தேனியை சேர்ந்த சகுபர் சாதிக் என்பவர் வேனை ஓட்டினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செட்டியபட்டி ரங்காபுரம் விலக்கு பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் வந்தபோது, திடீரென வேனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதை தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் வேன் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தில் வேன் மற்றும் அதிலிருந்த மருத்துவப் பொருட்கள் எரிந்து நாசமாகின. சேத மதிப்பு ரூ.பல லட்சம் என கூறப்படுகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக வேனில் தீப்பற்றியது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.