ஃபுட் ட்ரக்கில் அசத்தும் எம்பிஏ பட்டதாரி!
உணவகம் நடத்துவதற்கு தொழில் உத்தியும், தொழில் நேர்த்தியும் மிக முக்கியம். அதேபோல வாடிக்கையாளர்களுக்கு நல்ல உணவுகளையே கொடுக்க வேண்டும் என்ற கொள்கையும் அதைவிட முக்கியம். அதிக செலவு செய்து, பெரிய உணவகத்தை அமைத்துத்தான் நல்ல உணவுகள் கொடுக்க வேண்டும் என்றில்லை. சாதாரண ஃபுட் ட்ரக்கிலும் கூட வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான நல்ல உணவுகள் கொடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ‘மிஸ்டர் ஜாக்’ என்கிற ஃபுட் ட்ரக் உணவகம். சென்னை திருமங்கலத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில், திருமங்கலத்திற்கு அடுத்த வேவ்ஸ் சிக்னல் அருகே இருக்கிறது இந்த ஃபுட் ட்ரக் உணவகம். மாலை 7 மணி முதல் இரவு 12:30 மணி வரை செயல்படும் இந்த ஃபுட் ட்ரக் அந்தப்பகுதி உணவுப் பிரியர்கள் மாலையில் சந்தித்துக்கொள்ளும் மீட்டிங் பாயிண்ட்டாக இருக்கிறது. இந்த உணவகத்தை நடத்தி வரும் விமல்ராஜை, பணிகளின் இடையே சந்தித்தோம்.
“அப்பாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால், நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். எம்.பி.ஏ படித்துவிட்டு ஒரு தனியார் ஐ.டி கம்பெனியில் நல்ல பொறுப்பில் வேலை பார்த்தேன். கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கின. அப்படித்தான் நான் பார்த்துவந்தவேலையும் போனது. எவ்வளவு பொறுப்பான வேலையாக இருந்தாலும், எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் அவர்கள் வேலையை விட்டுப்போகச் சொன்னால் நாம் செல்லவேண்டும் என்ற உண்மை தெரிந்தது. அதனால் இனிமேல் எங்கும் வேலைக்கு செல்லக்கூடாது. நாமே ஏதாவது தொழில் தொடங்கலாமென முடிவெடுத்தேன். அப்படி உருவானதுதான் இந்த ஃபுட் ட்ரக்.உணவகம் நடத்துவதற்கு முன்அனுபவமோ, நல்ல பொருளாதாரமோ என்னிடம் இல்லை. சிறிய அளவில் நமக்குத் தெரிந்த உணவுகளை மட்டுமே கொடுத்து உணவகம் தொடங்கலாமென முடிவெடுத்தேன். அதனால் இந்த ஃபுட் ட்ரக்கை சிறிய அளவில் ஆரம்பித்து எனக்கு என்னவெல்லாம் சமைக்கத் தெரியுமோ அவற்றை மட்டுமே வீட்டுமுறையில் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தேன். படிப்படியாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடியது. இந்த இரண்டரை வருடத்தில் இந்தப் பகுதியின் முக்கியக் கடையாகவே இந்த ஃபுட் ட்ரக் மாறி இருக்கிறது. உணவகம் தொடங்கிய புதிதில் ஃப்ரைடு ரைஸ்கள் மட்டுமே கொடுத்து வந்தேன்.
ஆனால் இப்போது பரோட்டா, தோசை, பார்பிக்யூ, சிக்கன் லாலிபாப், நூடுல்ஸ், கறி தோசை என பல வெரைட்டிகள் கொடுக்கிறேன். கடைக்கு வருகிற வாடிக்கையாளர்கள் பல விதமான உணவுகளை விரும்புகிறார்கள். அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகள் பிடிக்குமோ அந்த உணவை அவர்கள் விரும்பும் சுவையில் செய்து கொடுக்கிறோம். சைவத்திலும் பல உணவுகள் கொடுக்கிறோம். கடை தொடங்கும்போது ஒரு நாளைக்கு 2 ஃப்ரைடு ரைஸ் விற்பதே சிரமமாக இருக்கும். ஆனால், இப்போது 10 கிலோவுக்கு மேல் ஃப்ரைடு ரைஸ் விற்பனை களைகட்டுகிறது. மிகக் குறைந்த நேரத்தில் 10 கிலோ சிக்கன் சைடிஷ்கள் விற்பனை ஆகிறது. கடை ஆரம்பிக்கும்போது கடைக்கு சாப்பிட வந்தவர்கள் இப்போதும் கூட சாப்பிட வருகிறார்கள். இரவில் செயல்படுகிற பல உணவகங்களில் உணவுகளின் விலை சராசரியை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால் நமது உணவகத்தில் எப்போதுமே ஒரே விலைதான். 100 ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் கொடுக்கிறோம். அதேபோல மற்ற டிஷ்களின் விலையும் கூட குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில், நமது கடைக்கு பெரும்பாலும் நடுத்தர மக்கள்தான் சாப்பிட வருவார்கள்.
அவர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையிலும், அதே நேரத்தில் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும் கொடுத்து வருகிறேன். ஃப்ரைடு ரைஸில் வெஜ், கோபி, மஸ்ரூம், பனீர், மிக்ஸ்டு ரைஸ் என பல வெரைட்டிகளில் ஃப்ரைடு ரைஸ் கொடுக்கிறோம். இதில் நான்வெஜ் ஃப்ரைடு ரைஸ்களும் உண்டு. எக் ஃப்ரைடு ரைஸ், சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என பல வெரைட்டிகளும் கொடுக்கிறோம். நூடுல்ஸிலும் வெஜ், நான்வெஜ் என வெரைட்டிகள் கொடுத்து வருகிறோம். ஸ்டார்ட்டர்ஸில் சிக்கன் 65, சிக்கன் லாலிபப், சில்லி சிக்கன், கார்லிக் சிக்கன், பெப்பர் சிக்கன், ட்ராகன் சிக்கன், சிக்கன் மஞ்சூரியன் என வெரைட்டிகள் கொடுத்து வருகிறோம். கடைக்கு வருகிற வாடிக்கையாளர்கள் பலவிதமான உணவுகளை சுவைத்து பார்க்கின்றனர். வீட்டுக்கும் வாங்கிச் செல்கின்றனர். கடைக்குத் தேவையான இறைச்சி வாங்குவதிலும் கூட கவனமாக இருக்கிறோம். கடை தொடங்கியதில் இருந்து இப்போது வரை ஒரே நபரிடம் சிக்கன் வாங்குவதால் அதன் தரம் சிறப்பாக இருக்கிறது.
அதேபோல நாங்கள் வாங்கும் கோழிகள் ஒரு கிலோவுக்கு கீழ் எடை உள்ள கோழிகளாக இருப்பதால் சீக்கிரம் வெந்து மசாலா நன்றாக இறங்கி சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். இப்படி உணவு விசயங்களில் தனிக்கவனம் செலுத்துகிறோம். தனியாளாக உணவகத்தைத் துவங்கினாலும் இப்போது நானும் எனது அப்பாவும் சேர்ந்துதான் இந்தக் கடையை நடத்தி வருகிறோம். தோசை, பரோட்டா, சப்பாத்தி என எல்லா உணவுகளிலும் பல வெரைட்டிகள் கொடுக்கிறோம். நமது கடையில் சிக்கன் கொத்து பரோட்டா ரொம்ப ஸ்பெஷல். அதேபோல, நெருப்பில் சுட்ட சவர்மாக்களும் பார்பிக்யூக்களும் ஸ்பெஷல். வாடிக்கையாளர்கள் கண்முன்னே சுடப்படுகிற இறைச்சி பார்ப்பதற்கே சாப்பிடவேண்டும் என்ற ஆசையைத் தூண்டும். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் நமது கடையின் சைடிஷ்கள் பரவலாக பிடித்துப்போயிருக்கிறது. என்னதான் இப்போது ஃபுட் ட்ரக் நடத்தி வந்தாலும் வரும் நாட்களில் தனியாக உணவகம் தொடங்கலாமென்ற எண்ணமும் இருக்கிறது. இன்னும் நிறைய உணவுகளோடு வெரைட்டியான சைடிஷ்களோடு தரம் மாறாமல் பல உணவுகள் கொடுக்க வேண்டும். அதுவே வருங்கால லட்சியம்’’ என நம்பிக்கையுடன்
கூறுகிறார் விமல்ராஜ்.
அதி
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி
செஸ்வான் ஃப்ரைடு ரைஸ்
செஸ்வான் சாஸ் செய்ய:
மிளகாய் வற்றல் – 8
செஸ்வான் மிளகு – 4 (இல்லையென்றால்
வீட்டில் உள்ள மிளகைப் பயன்படுத்தவும்)
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
இஞ்சி துறுவல் – 1/2 ஸ்பூன்
பூண்டு நறுக்கியது – 1/2 ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது – 1
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
வினிகர் – 1/2 ஸ்பூன்
சர்க்கரை – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 4 ஸ்பூன்
ஃப்ரைடு ரைஸ் செய்ய:
வேக வைத்த பாஸ்மதி அரிசி – 2 கப்
போன்லெஸ் சிக்கன் – 250 கிராம்
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
இஞ்சி துறுவல் – 1/2 டீ ஸ்பூன்
பூண்டு நறுக்கியது – 1 ஸ்பூன்
குடை மிளகாய், வெங்காய தால்,
துறுவிய கேரட் – 1 கப்
உப்பு.
செய்முறை
செஸ்வான் சாஸ் செய்ய:மிளகாய் வற்றலை வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைத்து பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் சர்க்கரை, உப்பு, அரைத்த மிளகாய் வற்றல் விழுது, வினிகர், சோயா சாஸ், செஸ்வான் மிளகு, சேர்த்து வதக்கவும். அதன்பிறகு 4 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன் தனியாக எடுத்து வைக்கவும். இப்போது செஸ்வான் சாஸ் தயார். பிறகு அதே பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். சிக்கன் வதங்கியவுடன், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு குடை மிளகாய், வெங்காய தால், கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் செஸ்வான் சாஸ் சேர்த்துக் கிளறவும். பிறகு வேகவைத்த சாதத்தை சேர்த்து உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். 2 முட்டைகளை உடைத்து ஸ்கிராம்பில்ட் எக் செய்து இதனுடன் பரிமாறவும்.