Friday, July 19, 2024
Home » ஃபயர்… க்ராக்கர் லாலிபாப்… 15 வகை பிரியாணி…

ஃபயர்… க்ராக்கர் லாலிபாப்… 15 வகை பிரியாணி…

by Lavanya

3 நண்பர்கள் நடத்தும் மார்டன் ரெஸ்டாரென்ட்!

எல்லா தொழில்களையும் போல உணவகத் தொழிலும் ஏற்ற இறக்கங்கள் நிரம்பியதுதான். அதை நம்பிக்கையுடன், ஆத்மார்த்தமான உணர்வுடனும் செய்தால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்கள் காந்தினி, சுந்தர், ராம் ஆகியோர். இவர்கள் 3 பேரும் இணைந்து வேளச்சேரி நடேசன் நகரில் தி ஓல்டு மிர்ச்சி என்ற பெயரில் நடத்திவரும் உணவகம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த மூவரையும் சந்திக்கச் சென்றிருந்தோம். நமது உறவினர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்தால் எப்படி நாம் பார்த்துப் பார்த்து விருந்தோம்பல் செய்வோமோ அதேபோலவே தங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை புன்சிரிப்புடன் வரவேற்று, அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு உணவினை வழங்குகிறார்கள்.

நம்மையும் அதே பாணியில் வரவேற்று தங்களின் உணவக அனுபவம் குறித்து பேசினர். “ தீ ஓல்டு மிர்ச்சி பிரியாணி உணவகம் துவங்கி 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது என்று நம்மிடம் பேசத்துவங்கினார் சுந்தர். நான், ராம், காந்தினி மூன்று பேரும் சேர்ந்துதான் உணவகத்தை நடத்தி வருகிறோம். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறேன். ராம் ஐ.டி கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருந்தார். உணவகத்தை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய ஐ.டி கம்பெனி வேலையை உதறித் தள்ளிவிட்டு இன்றைக்கு முழுவதுமாக இறங்கி உணவகத்தை நடத்திவருகிறார். காந்தினி சைக்காலஜி படித்தவர். காந்தினிக்கும், ராமுக்கும் ராஜபாளையம்தான் சொந்த ஊரு. எனக்கு தஞ்சாவூர். நாங்கள் மூன்று பேரும் எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள்.

உணவகத்தின் மேல் இருக்கும் ஆர்வத்தில் மூவரும் சம்பாதித்த பணத்தைப் போட்டுத்தான் இந்த ஃபீல்டில் இறங்கி இருக்கிறோம். அதேபோல் உணவகத்தில் அனைத்து குசைன் உணவுகளையும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா ஸ்டைல் ஃபுட் மற்றும் பிரியாணி கொடுக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். அதுவும் அதே ஆத்தண்டிக் டேஸ்ட்டில் கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதற்காகவே ஆந்திராவில் இருந்து செஃப்பை அழைத்து வந்து உணவினை தயார் செய்கிறோம். இன்றைக்கும் நாங்கள் அதே ஆத்தண்டிக் டேஸ்ட்டில் உணவினை தயார் செய்து கொடுத்து வருகிறோம்” என தங்கள் உணவகம் துவங்கப்பட்ட கதையைச் சுருக்கமாக விளக்கினார் சுந்தர்.

அவரைத் தொடர்ந்து காந்தினி பேசத்துவங்கினார்.“ உணவகம் துவங்கிய கொஞ்ச காலத்திலேயே நாங்கள் எதிர்பார்த்ததை விட ரெஸ்டாரென்ட்க்கு கூட்டம் அதிகம் வரத் துவங்கியது. எங்களுக்கே மேனேஜ் செய்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. வருபவர்களில் பல பேர் ஐதராபாத் ஸ்டைல் பிரியாணியைக் கேட்டு வாங்கி சாப்பிடத் துவங்கினார்கள். அதில் சிலர் எங்களிடம் ஐதராபாத் பிரியாணி பற்றிய பாசிடிவ் ரிவ்யூ கொடுக்கத் தொடங்கினார்கள். ஒருசிலர் பிரியாணியோடு சுக்கா கொடுங்கள், பிரியாணியோடு 65 கொடுங்கள் என்று கேட்பார்கள். அவர்களுக்காவே நாங்கள் புதிதாக 65 பிரியாணி, சுக்கா பிரியாணி என்று கொடுக்கத் துவங்கினோம். அதையும் நம்ம ஊர் ஸ்டைலில் கொடுத்தோம். அதாவது காரம் இருப்பது தெரிய வேண்டும், ஆனா தெரியக்கூடாது. இருக்கு ஆனா இல்லன்னு ஒரு படத்தில் டயலாக் வருவதுபோலத்தான் இது.

பொதுவாக ஐதராபாத் பிரியாணி என்றாலே அது லேயர் ஸ்டைலில் இருக்கும். அதனால் வாடிக்கையாளர்களிடம் ஸ்பைசியா வேண்டுமா? நார்மலாக வேண்டுமா? என்று கேட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப பிரியாணியைக் கொடுக்கத் துவங்கினோம். காரம் அதிகம் வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு மசாலாவைக் கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொடுப்போம். அதுவே காரம் குறைவாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு குறைவான மசாலாவைக் கொடுப்போம். அந்தக் குறிப்பிட்ட காலம் வரை நாங்கள் எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணோம். எவ்வளவு ப்ராபிட் கிடைத்தது என்பதே தெரியாது. ரெஸ்டாரென்ட் வெச்சு நடத்துகிறோம். நம்முடைய உணவகத்தைத் தேடி நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

வருபவர்கள் திருப்தியாக சாப்பிட்டு செல்கின்றனர் என்று மட்டுமே இருந்தோம்.கோவிட் லாக்டவுன்தான் எங்களுக்கு ரெஸ்டாரென்ட் பிசினஸ் என்றால் என்ன என்பது பற்றி கற்றுக்கொடுத்தது. நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகையை அடகு வைத்தும், டெபாசிட் செய்து வைத்திருந்த பணத்தை எடுத்தும் உணவகத்தில் வேலை செய்பவர்களுக்கு சேலரி கொடுத்தோம்” என தங்களின் சோதனைக்காலத்தையும் விவரித்தார் காந்தினி. அவரைத் தொடர்ந்து நம்மிடம் ராம் பேசத் துவங்கினார்.“இப்படியே சென்று கொண்டிருந்தால் நாம் நினைத்த கோலை அடைய முடியாது என்று நினைத்த நாங்கள் உணவினை வீட்டிலேயே தயார் செய்து டெலிவரி செய்யத் தொடங்கினோம்.

முக்கியமான ஒரு பத்து ரூட்டை ஃபிக்ஸ் செய்து அதில் நாங்களே டூவீலரில் சென்று உணவினை டெலிவரி செய்து வந்தோம். இதற்காக ஒரு வாட்ஸப் குரூப்பையும் தொடங்கினோம். இதில் எங்கள் உணவகத்தில் பார்சல் வாங்கிக் கொண்டு டெலிவரி செய்து வந்த டெலிவரி நண்பர்களையும் சேர்த்தோம். அவர்கள் மூலமும் உணவினை டெலிவரி செய்தோம். அவர்கள் எங்களுக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தார்கள். இதற்காக நாங்களே ஒரு மேப் போட்டு உணவினை டெலிவரி செய்தோம். உதாரணத்திற்கு அம்பத்தூரில் ஃபுட் ஆர்டர் எடுத்தால் வேளச்சேரியில் உணவினைத் தயார் செய்து அண்ணா நகரில் முதல் டெலிவரியை துவங்கி அம்பத்தூர் வரை டெலிவரி செய்வோம்.இப்படியெல்லாம் சிரமப்பட்டதால்தான் இன்றைக்கு நாங்கள் 5 உணவகங்களுக்கு முதலாளிகள் ஆகிஉள்ளோம்.

கோவிட்டுக்கு பிறகு அடுத்தடுத்து உணவகம் திறப்பதற்கு எங்களுக்கு துணையாக இருந்தது ஃபுட் டெலிவரி நண்பர்களும், வாடிக்கையாளர்களும்தான். அதனால்தான் வேளச்சேரியில் உணவகம் ஆரம்பித்தபோது டெலிவரி நண்பர்களை ஸ்பெஷல் கெஸ்ட்டாக அழைத்து தொடங்க வைத்தோம்’’ என்றார்.“தற்போது ஒவ்வொரு செலவினையும் பார்த்துப் பார்த்து செய்கிறோம். 15 வருட அனுபவம் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது. நாங்கள் வருடத்திற்கு ஒரு பிரியாணியை லான்ச் செய்து, தற்போது 15 பிரியாணி ஃப்ளேவர்களை கொடுத்து வருகிறோம். எங்கள் உணவகத்தில் சிங்கிளாக வந்து சாப்பிட்டவர்கள் தங்களது இணையருடன் வந்து சாப்பிடுகிறார்கள். அதேபோல பலர் தங்கள் குழந்தைகளுடன் வந்து சாப்பிடுகிறார்கள்.

அப்படி வந்து சாப்பிடும் குழந்தைகளுக்காகவே நாங்கள் காயின் பரோட்டா என்று ஒன்றை லான்ச் செய்திருக்கிறோம். இதனை ஆர்டர் செய்து ஒவ்வொரு பைட்டாக சாப்பிடுவார்கள். தற்போது உணவகத்தில் பயர் பிரியாணி, க்ராக்கர் லாலிபாப் பிரியாணி, கோழி வறுவல் பிரியாணி என்று 15 வகை பிரியாணியோடு சேர்த்து கொத்தமல்லி கோழி வறுவல், ராயலசிம்மா கொடி வெப்புடு, பச்சி மிர்சி கரிவேபகு கொடி ஃப்ரை, மிர்சி ஹாட் கபாப், அமிட்சரி ஃபிஷ் டிக்கா என்று கொடுத்து வருகிறோம். இதுபோக வெஜ்ஜிலும் குண்டூர் கோபி, மஸ்ரூம் ஹெர்பல் அண்ட் சால்ட் கொடுத்து வருகிறோம். நாங்கள் உருவாக்கிய இந்த தி ஓல்டு மிர்ச்சி பிரியாணி எங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கற்று கொடுத்தது மட்டுமல்லாமல் நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இந்த உலகத்தில் உழைப்பைப் போட்டு முன்னேறத் துடிக்கும் அனைவரையும் செலிபிரிட்டியாக மாற்றலாம் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள் மூவரும்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி

You may also like

Leave a Comment

three × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi