Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தீயணைப்புத்துறை ஆணையம், சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சுனில்குமார் ராஜினாமா: உறுப்பினர்களும் பதவி விலகியதால் பரபரப்பு

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் தீயணைப்புத்துறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் ஆகியோர் தங்களது பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற டிஜிபிகள் திமுக ஆட்சியில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அந்த வகையில் திமுக ஆட்சியில் காவல்துறை டிஜிபியாக இருந்த ஓய்வு பெற்ற சங்கர் ஜிவாலுக்கு தீயணைப்புத்துறை ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்படி சங்கர் ஜிவால் தீயணைப்புதுறை தொடர்பான பணிகளில் சிறப்பாக பணியாற்றி வந்தார்.

அதேபோல், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டார். தமிழக தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற டிஜிபி அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டனர். தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் கட்சியான தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த மே 10ம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றப்பிறகு திமுக ஆட்சியில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். அந்த வகையில் தீயணைப்புத்துறை ஆணையத்தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவருடன் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருந்த சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இம்ரான் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தமிழக தீயணைப்புத்துறைக்கு என தனியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனி ஆணையம் உருவாக்கப்பட்டு முதல் ஆணைய தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

அதேபோல் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். ஒரே நேரத்தில் 2 ஓய்வுபெற்ற டிஜிபிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதையடுத்து காலியாக உள்ள இந்த 2 பதவிகளுக்கு விரைவில் தவெக அரசு புதிய தலைவர்களை நியமிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.