காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் விதிமுறைகளை மீறி பயணித்த ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து, போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாநகரில் நாளுக்குநாள் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் பெருக்கத்தினால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வரையறையின்றி ஆட்டோ ஓட்டுநர்களும், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் சாலைகளில் ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும், ஒருசில விபத்துகளும் நிகழ்கின்றன.
அதேபோல், ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிகொண்டு பயணிப்பதும், அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்ட வண்ணமும், இரவு நேரங்களில் வண்ண வண்ண மின் விளக்குகள், எல்இடி லைட்டுகளை ஒளிரவிட்டபடியும் செல்வதினால், விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் மாநகரில் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோக்களை போலீசாரின் உதவியோடு மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது, விதிமுறைகளை மீறி அதிகளவு எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த மற்றும் வெள்ளை நிறம் ஒலி தரக்கூடிய எல்இடி மின் விளக்குகள், வண்ண வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களின் லைட்களை, அதன் ஓட்டுநர்களை வைத்து உடைக்க வைத்தும் அதிக சத்தம் எழுப்பிக் கூடிய ஆர்ன் இணைப்புகளை துண்டிக்க வைத்தும் அபராதம் விதிக்கப்பட்டது.