மதுரை: நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஓய்வு நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு அமைக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை பரிந்துரைத்துள்ளது. கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தக்கல் செய்த மனு: மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் நான் உட்பட ஏராளமாேனோர், ரூ.100 கோடி வரை முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி முதலீட்டுத் தொகையை வட்டியுடன் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்த புகாரில் 2017ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வு நீதிபதி சுதந்திரம் குழுவை நீதிமன்றம் நியமித்தது. அந்தக்குழு நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையில் நிதி நிறுவன நிர்வாகி செந்தில்வேல் இறந்து விட்டார். எனவே, நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, நீதிமன்றம் ஏற்கனவே ஓய்வு நீதிபதி தலைமையில் பிரச்னையை தீர்க்க உத்தரவிட்டது. ஆனால் நிதி நிறுவன தரப்பினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. வழக்கு விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட பொருள் போல் அப்படியே உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. இந்த வழக்கை ஆறு மாதத்தில் விசாரணை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொருளாதார குற்றப்பிரிவினரின் விசாரணை அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் 1,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 6,90,166 நபர்கள் முதலீடு செய்துள்ளனர். இதற்காக மட்டும் இதுவரை 366 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.827 கோடி மதிப்புள்ள சொத்துகள் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில் நீதிமன்றத்தில் சுமார் ரூ.50.71 கோடி, மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் ரூ.373 கோடி வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.264 கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. எனவே, அரசு இந்த விவகாரங்களை எளிதாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்தால் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து சொத்துகளை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும். இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வது எப்போது என தெரியவில்லை. எனவே, அரசு பொருளாதார மோசடியில் பாதிக்கப்பட்டவர்களை கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.
* தமிழ்நாட்டில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் 1,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* சுமார் ரூ.827 கோடி மதிப்புள்ள சொத்துகள் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.
* புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.