வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி பகுதி-3 டபுள்ரோட்டை சேர்ந்தவர் எஸ்.முகிலன்(47). இவர் அமேசான் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்டாகவும் இருந்து வந்தார். அப்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஐஎப்எஸ் நிதி நிறுவனத்துக்கு டெபாசிட்டாக பணம் பெற்றாராம். இந்நிலையில் மோசடியில் சிக்கிய நிதி நிறுவனம் மூடப்பட்டது. முதலீடு செய்தவர்கள் முகிலனிடம் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததால் தலைமறைவானார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பியவரிடம் பலர் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்துவாச்சாரி போலீசார் விசாரித்தபோது, முகிலன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. இதில், நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ரூ.1 கோடிக்கு மேல் ஜெகதீசனிடம் ஏமாந்து விட்டேன். என்னிடம் இன்று ஒன்றுமே இல்லை. என்னை ஆள்வைத்து தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறான். அதனால் நான் இறந்த பிறகாவது அரசாங்கம் ஜெகதீசனிடம் பணத்தை மீட்டுக் கொடுக்கும் என்று தான் இந்த முடிவை எடுத்தேன் என்று எழுதியுள்ளார்.