டெல்லி: டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு அமைச்சர் ஆவடி நாசர் நிதியுதவி வழங்கினார். தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது. இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இன்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன.
பூமைதின் பகுதியில் குஹி-ஹொப்ரி என்ற பகுதியில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 300 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். இதையடுத்து, டெல்லி மதராஸி கேம்ப்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி அறிவித்தார். பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கவும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.50,00,000 மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை நேரில் சந்தித்து அமைச்சர் நாசர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS விஜயன், அயலக தமிழர் நல ஆணையர் வள்ளலார் IAS, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.