சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் (பாஜ) பேசியதாவது:
காவலர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதால் யோகா பயிற்சி அளிக்க வேண்டும். காவலர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஆய்வாளர்களாக உள்ள 239 பேருக்கு நீண்டநாட்களாக டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்கும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் செய்வது தெரியாமல், எப்படியாவது குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற செயல்படுவதால்தான் பல் பிடுங்கும் சம்பவங்கள் நடந்துள்ளது. அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
எம்பி, எம்எல்ஏக்கள் காவல் நிலையத்துக்கு போன் செய்து, வணக்கம் சார் என்றுதான் பேசுகிறார்கள். ஆனால் காவல் அதிகாரிகள் ‘சொல்லுங்க’ என்றுதான் பேச்சை ஆரம்பிக்கிறார்கள். மரியாதை கொடுக்க அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. ஆனால் கடையில் இருந்து வெளியில் வந்தவுடன் போலீசார் ஊத சொல்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
நிதி நிறுவனங்கள் நடத்த லைசென்ஸ் கொடுக்கும்போது எவ்வளவு வட்டி என்று கண்டறிந்து முறைகேடுகளை தடுக்க வேண்டும். திருவிழாக்களில் நாட்டுப்புற கலைஞர்கள் இரவு 9 மணிக்கு மேலும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும். பெண் காவலர்களுக்கு இரவு ரோந்து பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.