சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம், அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூர் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த மூன்று பேரையும் 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவில், வழக்கில் தொடர்புகள் குறித்தும், யார் யாருக்கு நிதி சென்றுள்ளது, எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதால், மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த மனு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. தேவநாதன் உள்பட 3 பேரும் நேரில் ஆஜர்படுத்தபட்டனர். இதையடுத்து நீதிபதி, மூவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், அவர்களை செப்டம்பர் 3ம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.