நாமக்கல்: நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் தாயார் மறைந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவரின் தாயார் லீலாவதி(72) கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த சூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் லீலாவதி உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, முத்துசாமி, மூர்த்தி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாமிநாதன், மதிவேந்தன், சிவசங்கர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில்; தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களின் தாயார் லீலாவதி அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று மறைவுற்றார்கள். இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று, மறைந்த அம்மையார் லீலாவதி அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். தாயாரை இழந்து வாடும் உதயச்சந்திரன் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.