சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தம் பெற்றோரையும், தாம் பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் ‘படைவீரர் கொடி நாள்’. இக்கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் எல்லைகளையும், நமது சுதந்திரத்தையும் காத்திடும் பணியில் எண்ணற்ற படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். இவர்கள் தனி மனிதர்கள் அல்ல.
தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பு ராணுவ வீரர்களுக்கு உண்டு. அந்தபொறுப்பை நாட்டு மக்கள் தங்கள் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பல நலத் திட்டங்களை வழங்கி, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலன் காப்பதில், நமது மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது. எனவே, இவ்வாண்டு கொடி நாளிலும் பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கும், குடும்பத்தாருக்கும் நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம்.


