2023 ல் மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பலத்த பொருட்சேதம் ஏற்பட்டது. வெள்ள நிவாரணத்தொகையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.38 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் கோரியிருந்தார். ஆனால், ஒரு சதவீதம் கூட ஒதுக்காமல், வெறும் ரூ.285 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி அதிர்ச்சி அளித்தது. அதேநேரம் தமிழகத்ைத விட பாதிப்பு குறைந்த கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடி ஒதுக்கியது. கடந்தாண்டு நவம்பரில் பெஞ்சல் புயலால் டெல்டா மாவட்டங்கள், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மொத்தம் 69 லட்சம் குடும்பங்கள், 1.50 கோடி பேருக்கும் மேல் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக மறுசீரமைக்க ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது.
முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஒன்றிய அரசின் குழு பார்வையிட்டு வெள்ள சேத மதிப்பை கணக்கிட்டு, நிவாரணத்தொகையை வழங்க வேண்டுமென்றும் கோரியிருந்தார். ஒன்றிய குழு பெரும் பாதிப்பு அடைந்ததாக கூறியிருந்தபோதிலும், வழக்கம்போல இம்முறையும் ஒன்றிய அரசால் போதிய நிதி வழங்கப்படவில்லை. இந்த சூழலில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளின் துயரை துடைக்கும் வகையில், ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 18 மாவட்டங்களை சேர்ந்த 5.18 லட்சம் விவசாயிகள் பயனடைவர். நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கடந்தாண்டு இந்தியாவில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியாக ரூ.1,554.99 கோடி வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. இதில் ஒன்றிய பாஜ அரசுக்கு ஆதரவு அளிக்கும் ஆந்திராவுக்கு அதிகபட்சமாக ரூ.608.08 கோடி, நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடி, ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடி, தெலங்கானாவிற்கு ரூ.231.75 கோடி, திரிபுராவிற்கு ரூ.288.93 கோடி அளிக்க ஒப்புதலாகியுள்ளது. தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. மிக்ஜாம், பெஞ்சல் புயல் தந்த பெரும்பாதிப்புக்காக கோரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. அதேநேரம் தங்களுக்கு சாதகமான மாநிலங்களுக்கு மட்டும் நிவாரண நிதியை அள்ளி வழங்குகிறது. இது ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களில் இருந்து பெறும் வரி வருவாயை ஒருங்கிணைந்து பெற்று ஆட்சி அமைப்பதால்தான், இந்திய அரசானது ஒன்றிய அரசு எனப்படுகிறது. வரிகளை மட்டும் பெற்றுக் கொண்டு அதற்கான ஜிஎஸ்டி பணத்தை ஒப்படைக்காமல் இழுத்தடிப்பது, பேரிடர் நிதி கோரிக்கையை புறக்கணிப்பது, மும்மொழி கொள்கையை ஆதரித்தால்தான், நிதி வழங்கப்படுமென வெளிப்படையாகவே பேசுவது, என ஒன்றிய பாஜ அரசு, தான் ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீதான தங்களது பழி வாங்கும் போக்கை தொடர்கிறது. இந்த அநீதியை எதிர்கொண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெல்லும் மன திடம் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனாலும், நிதியில் செய்யும் அநீதியை இனியாவது, ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டுமென்பதே தமிழக மக்களின் வலியுறுத்தலாகும்.