இ ந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிடம் இருந்து வரி வருவாயை பெற்று ஆட்சி செய்யும் ஒன்றிய அரசு, அந்நிதியை மாநிலங்களுக்கு சரியான விகிதத்தில் பிரித்து அனுப்ப வேண்டும். ஆனால், தமிழகத்திற்கான நிதி பங்கீட்டில் அநீதி இழைப்பதையே ஒன்றிய அரசு ‘முக்கிய கடமையாக’ கொண்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் சார்பில் கேட்கப்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவான நிதியே வழங்கப்பட்டது. கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனை பார்வையிட்ட ஒன்றிய குழுவினர், சேத மதிப்பு அதிகமுள்ளது என குறிப்பிட்டும் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டது.
மேலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், வெவ்வேறுவிதமான கல்விச்சூழல் உள்ளது. எனவே, கல்வி என்பது மாநில பட்டியலில் மட்டுமே இருக்க வேண்டும்.
அப்போதுதான் அம்மாநிலத்தின் கல்வித்தரம் உயரும். ஆனால், ஒன்றிய அரசு கல்வி விஷயத்திலும் மூக்கை நுழைத்தது. தேசிய கல்விக் கொள்கை எனும் மும்மொழி கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மூலம், மாநிலத்தில் கல்வித்தரத்தை உயர்த்திய தமிழக அரசு இதனை ஏற்கவில்லை. இதனால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியான ரூ.2,152 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு புறக்கணித்தது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தார். ஆனாலும், மும்மொழி கொள்கையை ஏற்க மறுப்பதை சுட்டிக் காட்டி, தொடர்ந்து கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு தமிழக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில்தான் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறவில்லை என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளனர். அதாவது; கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். தேசிய கல்விக்கொள்கையுடன் கட்டாய கல்வி சட்டத்தை இணைக்க வேண்டியதில்லை. 2021 முதல் ஒன்றிய அரசு இந்த நிதியை அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசுக்கு வழங்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் கட்டாய கல்வி திட்டத்திற்கான நிதியை மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என வலியுறுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு என்பது, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாகவே இதற்கான 60 சதவீத தொகையை தமிழக அரசுக்கு, ஒன்றிய அரசு வழங்கவில்லை. இந்தியாவில் 2009ம் ஆண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழை மாணவர்களின் தரம் உயர்த்தும் இந்த திட்டத்தை இல்லாமல் ஆக்கிவிடும் மறைமுக நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறதா என தமிழக மக்கள் சந்தேகிக்கின்றனர். ஒவ்வொரு கட்சியும் அரசியல் செய்வது அவசியம்தான். அதனை மறுக்க முடியாது. ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வியில் அரசியல் செய்வது மிகவும் தவறானது. இதை உணர்ந்தாவது தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யுமென நம்புவோம்.