புதுடெல்லி: வரும் நவம்பர் மாத இறுதிக்குள் 16வது நிதி ஆணையத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார். ஒன்றிய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தனியார் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வரும் நவம்பர் இறுதிக்குள் நிதி ஆணையம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆணையம் அமைப்பதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. முந்தைய நிதி ஆணையம் 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 நிதி ஆண்டுகளுக்கான அதன் அறிக்கையை கடந்த 2020 நவம்பர் 9ம் தேதி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.
இதனை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. என்.கே. சிங் தலைமையிலான 15வது நிதி ஆணையம், 14வது நிதி ஆணையம் பரிந்துரைத்த அளவில், வரிப் பகிர்வு விகிதத்தை 42% ஆக வைத்திருந்தது. 2022-23 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதால், நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.48,000 கோடியை அரசு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.