புதுடெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்திற்கு ரூ.5,000 கோடி ஒன்றிய அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் நிதி கோரினால் பரிசீலிக்கப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி குறித்து மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 23 நகரங்களில் 1,011 கிமீ தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 979 கிமீ கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. மொத்தம் 29 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கத்திலும், கட்டுமானத்திலும் உள்ளன. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க்கை கொண்ட 3வது நாடாக உள்ளது. அமெரிக்கா 1400 கிமீ மெட்ரோ வழித்தடத்தை கொண்டுள்ளது.
எனவே நகர்ப்புற போக்குவரத்தில் 2வது பெரிய நெட்வொர்க்காக நாம் மாறுவதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு நமக்கு தேவை. இதில் அனைத்து மாநிலங்களும் நல்ல ஒத்துழைப்பை தருகின்றன. சில மாநிலங்கள் மற்றவர்களை விட நன்றாகவே ஒத்துழைக்கின்றன. மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தை பொறுத்த வரையில், விரிவான திட்ட அறிக்கையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்ட அறிக்கையை நாங்கள் பெறவில்லை. எனவே, முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்படாமல், அதன் தாக்கங்கள் ஆராயப்படாமல் நாடாளுமன்றத்தில் என்னால் எந்த உறுதியையும் வழங்க முடியாது. அனைத்து ஆவணங்கள் வழங்கப்படும் பட்சத்தில் அனுமதியும் விரைவாக கிடைக்கும். சென்னை மெட்ரோ திட்டம் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது முதலில், ரூ.85,000 கோடி செலவில் 107 கிமீக்கு 2ம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்திற்கான அனுமதி கடந்த 2017ல் கேட்கப்பட்டது.
ஆனால் தேவையான ஆவணங்கள் இல்லாததால், இந்த திட்டம் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 2018ம் ஆண்டில், தமிழ்நாடு அரசு அதன் சொந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்தது. பின்னர் 2019 ஜனவரியில், ரூ.69,180 கோடி செலவில் 118.9 கிமீக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கடந்த 2024 அக்டோபரில் ரூ.63,246 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு ரூ.7,424 கோடி. மீதமுள்ளவை வெளிநாட்டு கடன் மூலம் பெறப்படும். இதில் தற்போது மாநில முதல்வரிடம் இருந்து எந்த கூடுதல் நிதி கோரிக்கையையும் நாங்கள் பெறவில்லை. கூடுதல் நிதி கேட்டால் பரிசீலிக்கப்படும். ஏற்கனவே ரூ.5,000 கோடி ஒன்றிய அரசிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. வெளிக்கடன் மூலம் ரூ.33,000 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.