சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களில் காலி பாட்டில்களை சேகரிக்கவும், தின் பண்டங்கள் விற்கவும் உரிமம் வழங்குவதற்காக டாஸ்மாக் நிர்வாகம் அக்டோபர் 6ம் தேதி டெண்டர் அறிவிப்பாணையை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பார் டெண்டர் விண்ணப்பதாரர்கள் 7 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எம்.மணிமாறன் ஆஜராகி, டெண்டர் அறிவிப்பில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும். எனவே, டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றார். அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, டெண்டரில் கலந்து கொள்ள மனுதாரர்களை அனுமதிக்கலாம். இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகள் அறிவிப்பதை தள்ளிவைக்கலாம் என்று தெரிவித்தார். இதை மனுதாரர்கள் தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் டெண்டரில் பங்கேற்கலாம். இந்த வழக்குகளின் இறுதி உத்தரவு வரும்வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்க கூடாது. அதனை தள்ளிவைக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.